ஒரு முக்கிய அறிவிப்பு

நான் http://thamizhoviya.blogspot.com/ (தமிழ் ஓவியா) என்ற பெயரில் வலைப்பூ ஒன்று தொடங்கப் பட்டு பெரியாரின் சிந்தனைகளை பதிவு செய்து வருகிறேன். ஏதோ ஒரு நோக்கத்திற்காக பெயர் தெரியாத நபர் ஒருவர் http://thamizhovia.blogspot.com/ (THAMIZHOVIA) என்ற பெயரில் வலைப்பூ ஒன்றைத்தொடங்கியுள்ளார் நன்றாக கவனியுங்கள் எனது வலைப் பூவின் பெயர் http://thamizhoviya.blogspot.com/ (தமிழ் ஓவியா). வேறு ஒரு நபரால் தொடங்கப்பட்ட வலைப்பூ வின் பெயர் http://thamizhovia.blogspot.com/ (THAMIZHOVIA) மிக நுணுக்கமான வேறுபாட்டைக் கவனித்தீர்களா? எனது வலைப்பூவில் oviya (தமிழ் ஓவியா) என்று இருக்கும் வேறு ஒரு நபர் தொடங்கிய வலைப்பூவில் ovia (THAMIZHOVIA) என்று இருக்கும் . எனவே தோழர்கள் ஏமாறாமல் இருக்கும்படி கேட்டுக் கொள்கிறேன். அந்த வலைப்பூ விற்கும் எனக்கும் எந்தத் தொடர்பும் இல்லை. தோழர்கள் இதைக் கவனத்தில் கொண்டு தமிழ் ஓவியா வலைப்பூ விற்கு ஒத்துழைக்கும் படி வேண்டுகிறேன். நன்றி

தமிழ் ஓவியா படைப்புகளில் தேட..!

Loading...

7.12.09

கட்டாயப் பதிவு திருமணம் அவசியம் ஏன்?எதனால்?


திருமணம், கட்டாயப் பதிவு
வரவேற்கத்தக்கது

எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும் சரி, மதம் சாராதவர்களாக இருந்தாலும் சரி, அவர்களின் திருமணங்கள் கட்டாயப் பதிவு செய்யப்படவேண்டும் எனும் சட்டம் வரவேற்கத்தக்கதாகும்.

உலகம் முழுவதும் பெரும்பாலான நாடுகளில் இது நடைமுறையில் இருந்துதான் வருகிறது. இந்தியாவைப் பொறுத்தவரை இந்து மதத்திற்குள்ளேயும்கூட ஒரே மாதிரியான திருமண முறை கிடையாது. பல்வேறு ஜாதிகளிடையே பல்வேறு முறைகளில் இருந்து வருகின்றன.

எல்லா ஜாதியினரும் பார்ப்பனர்களை அழைத்துத் திருமணம் செய்கிறார்கள் என்பதும் கிடையாது. ‘கீழ்மட்ட’ ஜாதிகளில் அழைத்தாலும் புரோகிதப் பார்ப்பனர்கள் செல்லமாட்டார்கள் என்பது இன்னொருபுறம்.

பார்ப்பனர்களை அழைத்துத் திருமணங்களை நடத்தியிராத சில சமூகத்தினர், பொருளாதார ரீதியாக கொஞ்சம் அந்தஸ்து வந்ததும், பார்ப்பனர்களை அழைத்துத் திருமணம் நடத்திக் கொள்ளும் போலி கவுரவத்திற்கு ஆளானார்கள்.

தந்தை பெரியார் அவர்களால் அறிமுகப்படுத்தப்பட்ட சுயமரியாதைத் திருமணம் ஒரு தலைகீழ்ப் புரட்சியைத் தமிழ்நாட்டில் உருவாக்கியது. அந்தத் திருமணம் சட்டப்படி செல்லாது என்று நீதிமன்றங்களின் தீர்ப்புகள் வந்தாலும்கூட, அதைப்பற்றியெல்லாம் கிஞ்சிற்றும் கவலைப்படாமல், தன்மானம்தான் முக்கியம் என்ற அடிப்படையில், புரோகித மறுப்புத் திருமணங்கள் நாட்டில் ஆயிரக்கணக்கில் நடைபெறத் தொடங்கிவிட்டன. இது உலகத்தில் எங்கும் கண்டிராத, கேட்டிராத சமூகப் புரட்சியாகும்.

திருமணங்களைப் பதிவு செய்யவேண்டும் என்ற கருத்தினையும், பகுத்தறிவு இயக்கம் எடுத்துரைத்துதான் வந்திருக்கிறது. இதனால் பலவித நன்மைகள் உண்டு. வெளிநாடு செல்லும் தம்பதியினருக்கு திருமணம் பதிவு செய்யப்பட்டதற்கான ஆவணம் கண்டிப்பாகத் தேவைப்படுகிறது. அரசிடமும் திருமணம் ஆனவர்கள் பற்றிய புள்ளி விவரங்கள் கிடைத்து வருகின்றன.

அதைவிட மிக முக்கியம்; இதன்மூலம் குழந்தைத் திருமணம் தடுக்கப்படுகிறது.

வடமாநிலங்களில் ராஜஸ்தான், மத்தியப் பிரதேசங்களில் குழந்தைகள் திருமணம் என்பது சர்வசாதாரணமாகும். பெண்ணுக்குத் திருமண வயது 18 என்றும், ஆணுக்கு 21 வயது என்பதும் சட்டப்படியான நிலையாகும்.

திருமணம் சட்டப்படி பதிவு செய்யப்படவேண்டும் என்கிறபோது, வயதுக்கான சான்றிதழ் கட்டாயமாகிறது. இந்த வயதுக்குக் குறைந்தவர்கள் திருமணம் செய்துகொள்வது தடுக்கப்படுகிறது.

தமிழ்நாட்டில் சிதம்பரத்தில் தீட்சிதர்கள் குடும்பங்களிலும் சட்டப்படி திருமண வயதுக்கு வராதவர்களிடையே கல்யாணம் நடைபெற்று வருகிறது. குடும்பச் சொத்துகள் பாதுகாப்பு என்ற மூடுதிரையில் இவை நடந்துவருகின்றன. கட்டாய திருமணப் பதிவு முறையால் இந்தக் கொடுமை தடுத்து நிறுத்தப்படுகிறது.

திருமண வயது தொடர்பான பிரச்சினை இந்துக்கள் சமுதாயத்தில் நீண்டகால பிரச்சினையாகும். திருமண வயதை உயர்த்தக் கூடாது என்று காங்கிரசில் இருந்த சனாதனவாதிகளான பார்ப்பனர்கள் எம்.கே. ஆச்சாரியார் போன்றவர்கள் திருமண வயதை உயர்த்துவது இந்து சாஸ்திரங்களுக்கு விரோதம் என்றெல்லாம் வாதிட்டனர்.

ருது ஆவதற்கு முன் பெண்ணுக்குத் திருமணம் செய்துவிடவேண்டும் என்று பராஸர் கூறுகிறார். இதனை மீறினால் நரகத்துக்குப் போகவேண்டி வரும். நாங்கள் சட்டத்தை மீறினாலும் மீறுவோமே தவிர, ஒருபோதும் சாஸ்திரங்களை மீறமாட்டோம் என்று கூச்சல் போட்டனர். சாரதா சட்டம் கடும் எதிர்ப்புக்கிடையே நிறைவேற்றப்பட்டது.

பல தடைகளைக் கடந்து, ஆணுக்கு 21 வயதும், பெண்ணுக்கு 18 வயதும் என்று உறுதிப்படுத்தப்பட்ட நிலையில், அதனையும் ஏமாற்றும் வகையில் நடைபெற்றுவரும் சட்ட விரோத நடவடிக்கைகளையும் கட்டாயப் பதிவு திருமணம் என்பது தடுக்கக் கூடிய ஒன்றாகும். வரவேற்கவேண்டிய சட்டம் அதனை இலகுவாகப் பதிவு செய்யும் நடைமுறைகளை உருவாக்கவேண்டியது அவசியம் என்பதை அரசுக்குத் தெரிவித்துக் கொள்கிறோம்.

-------------------"விடுதலை" தலையங்கம் 7-12-2009

தீட்சிதர்கள் மத்தியில் பரபரப்பா?


‘சிதம்பரம்’

சிதம்பரம் நடராஜன் கோயிலில் பூஜை செய்யும் தீட்சிதர்கள் தங்கள் பெயர்களைப் பதிவு செய்துகொள்ளவேண்டும் என்று இந்து அறநிலையத்துறை சார்பில் அறிவிப்புப் பலகை வைக்கப்பட்டுஉள்ளது.

2009 பிப்ரவரி 2 ஆம் தேதிமுதல் அதுவரை தீட்சிதர்ப் பார்ப்பனர்களின் ஏகபோக ஆதிக்கத்தில் இருந்த இந்தக் கோயில் இந்து அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டுக்குக் கீழ்வந்துவிட்டது.

உண்டியல், பிரசாதக் கடை வருமானம் எல்லாம் இனி இந்து அறநிலையத் துறைக்குத்தான்.

சிதம்பரம் கோயில் தீட்சிதர்கள் தங்கள் பெயர்களை இந்து அறநிலையத்துறை செயல் அலுவலகத்தில் பதிவு செய்துகொள்ளவேண்டும் என்கிற அறிவிப்பு, தீட்சிதர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளதாக ‘தினமலர்’ (7.12.2009) கூறுகிறது.

இதில் பரபரப்புக்கு என்ன வேலை என்று நினைக்கலாம். இருக்கிறது, நிறையவே இருக்கிறது.

இதற்கு எடுத்துக்காட்டு திருவரங்கம் ரெங்கநாதன் கோயில். இக்கோயிலில் அர்ச்சகர்களாகப் பணியாற்றுவதாகப் பட்டியலில் உள்ள பல பார்ப்பனர்கள் இந்தியாவிலேயே இல்லை; அமெரிக்காவில் இருக்கின்றனர். இன்னும் சில பார்ப்பனர்கள் திருவெறும்பூர் ‘பெல்’ நிறுவனத்தில் பணியாற்றிக் கொண்டிருக்கின்றனர். கோயில் பக்கம் தலைவைத்துப் படுக்காத இந்த அர்ச்சகப் பார்ப்பனர்களுக்கு மாத சம்பளம் மட்டும் கறாராகக் கிடைத்துவிடும்.

குறிப்பிட்ட வயதுவரை தான் அர்ச்சகராகப் பணியாற்றவேண்டும் என்ற விதிமுறைகள் இருக்கின்றன. அதைப்பற்றியெல்லாம் கவலைப்படாமல், 80 வயதைத் தாண்டியவர்கள்கூட சம்பளப் பட்டியலில் உள்ளனர்.

திருவரங்கம் கோயிலில் உதவி ஆணையராக வந்த கவிதா என்ற அம்மையார், இந்த முறைகேடுகளையெல்லாம் கண்டுபிடித்து வெளிச்சத்துக்குக் கொண்டு வந்து நடவடிக்கை எடுத்தார் என்பதற்காக, கோயில் பார்ப்பனர்கள் அவருக்குக் கொடுத்த தொல்லைகள் கொஞ்சநஞ்சமல்ல!

கடவுளின் பக்கத்தில் இருந்துகொண்டு பூஜை செய்பவர்கள், கருவறையைக் காமக் களியாட்டத்துக்குப் பயன்படுத்துவதும், சம்பளம் பெற வேண்டும் என்பதற்காகப் பொய்யான தகவல்களைக் கொடுப்பதும், கோயில், பக்தி சமாச்சாரங்களின் மோசடிகளை விளக்கப் போதுமானவையல்லவா!

------------- மயிலாடன் அவர்கள் 7-12-2009 "விடுதலை" யில் எழுதிய கட்டுரை

மதமும் பகுத்தறிவும்


இறந்துபோன மதங்கள்

இன்று உலகில் மிகக் குறைவான மதங்களே உள்ளன. கிறித்துவ மதம், இந்து மதம், புத்த மதம், ஜைன மதம், கன்ஃப்யூஷிய மதம், தாவோ மதம், சரதுஷ்ட மதம் ஆகியவையே அவை. இவை தவிர ஆங்காங்கே சில பிரதேச மதங்களும் நடைமுறையிலுள்ளன. இவற்றில் எந்தவொரு மதத்துக்கும் 2500 ஆண்டுகளைவிட அதிகப் பழைமை கிடையாது. அதற்கு முன்பு உலகில் மதங்கள் எதுவும் இல்லை என்பது பொருளல்ல. இன்றைய மதங்களைப் போலவே பிரபலமான பல மதங்களும் அன்றும் இருந்தன. புதிய மதங்கள் உற்பத்தியானவுடன் அவை அனைத்தும் அழிந்துவிட்டன.

மிகப் பழைமையான காலகட்டத்தில்தான் மனிதன் அவனுக்கு அப்பாற்பட்ட சக்திகளைக் கற்பிக்கவும் வழிபடவும் தொடங்கினான். இடி, மின்னல், காட்டுத்தீ, சூறைக்காற்று, கொடிய விலங்குகள் முதலியவற்றைத்தான் ஆதிகால மனிதன் கடவுளாக வழிபட்டு வந்தான். இந்தியர்களுடைய அக்னி, வாயு, வருணன், நாகம் ஆகியவையே இதற்கு எடுத்துக்காட்டுகளாகும். இவற்றில், சில இயற்கை வெளிப்பாடுகளை மனிதர்கள் அடக்கவும், அவர்களுக்குத் தெரியாத பிற சில விஷயங்களைக் கற்றுக்கொண்ட பிறகுதான் மத நெறிமுறைகளிலும் மாற்றம் வந்தது. பழைய நம்பிக்கைகளுடைய மனிதர்கள் என்றும் அதை நிலைநிறுத்த முயன்று வந்தனர் என்பதை எல்லா மதங்களுடைய வரலாறுகளும் நிரூபிக்கின்றன. பழைய மதங்களின் இடத்தில் புதிய மதங்கள் வரும்பொழுது, பழைய மதத்திலிருந்தவற்றில் நல்லதெனத் தோன்றிய செயல்முறைகளைப் புதிய மதங்கள் ஏற்றுக் கொள்வது வழக்கம்தான். யூத மதத்திலுள்ள சில மரபு வழக்கங்களைக் கிறித்துவர்கள் பின்பற்றுவது இதற்கு எடுத்துக்காட்டு ஆகும். இந்தியாவில் கூட பழைய வேத மதமோ திராவிட மதமோ இன்று நடைமுறையில் இல்லாவிட்டாலும்கூட அவற்றிலுள்ள பல மதக் கற்பனைகளையும் பிற்கால இந்து மதம் உள்வாங்கிக் கொண்டதைக் காணலாம்.

நடைமுறையிலுள்ள மதம் மனித முன்னேற்றத்துக்குத் தடையாக ஆகும்பொழுதோ அரசியல் மாற்றத்தின் பலனாகவோதான் புதிய மதம் தோன்றுகின்றது. ஆக்கிரமிப்பாளர்கள் அவர்களுடைய மதத்தை, வென்ற பிரதேசங்களில் வலுக்கட்டாயமாகத் திணித்ததற்கும் ஏராளமான சான்றுகள் உள்ளன. சில சமயங்களில் ஆக்கிரமிப்பாளர்களின் மதமும் ஆக்கிரமிக்கப்பட்ட பிரதேச மதமும் ஒன்றுக்கொன்று கலந்து புதிய உருவம் கொண்டதாகவும் காணலாம். ஆரியர்களுடைய இந்திய ஆக்கிரமிப்புக்குப் பிறகு நிகழ்ந்தது அதுதான். இந்திரனை முதன்மைக் கடவுளாக வழிபட்ட ஆரியர்களுடைய மதமும், சிஸ்ன தேவனை (சிவன்) வழிபட்ட திராவிடர்களுடைய மத நம்பிக்கைகளும் கலந்து இந்தியாவில் இந்து மதம் உண்டானது. ஆரியர்களுடைய வேத மதமோ, திராவிட மதமோ இன்று நடைமுறையில் இல்லை.

வரலாற்றுக்கு முந்தைய காலந்தொட்டே இவ்வாறு பிறந்து இறந்த மதங்களுடைய எண்ணிக்கை ஏராளமானதாகும். அவற்றில் சிலவற்றைப் பற்றி நமக்கு எந்த விவரங்களும் கிடைக்கவில்லை. பிரபலமாக விளங்கிய சில மதங்களுடைய விவரங்கள் மட்டும் மிஞ்சியிருக்கின்றன. அத்தகைய மதங்களுடைய எண்ணிக்கை மிகவும் அதிகமாகும். அதனால் அவற்றில் முக்கியமானவற்றின் விவரங்களை மட்டும் இங்கே சுருக்கமாகத் தருகின்றேன். குறிப்பெடுப்பதற்கு வசதியாக அகர வரிசைப்படி தந்திருக்கின்றேன்.

இறந்துபோன இந்த மதங்களைப் பற்றிப் படிக்கும்பொழுது இயல்பாகவே ஓர் அய்யம் எழலாம். இன்றைய மதங்களும் நாளை இதுபோல இறந்துவிடாதா என்பதுதான் அந்த அய்யம். நிச்சயமாக வரலாற்றில் மதத்தின் கதி அதுதான். ஆனால், இனிமேல் புதிய மதங்கள் தோன்றுவதற்கான வாய்ப்பு குறைவுதான். காரணம் மனிதர்கள் மூடநம்பிக்கைகளிலிருந்து விடுபட்டுக் கொண்டிருக்கின்றனர். உலக மக்கள் தொகையில் ஏறத்தாழ நான்கில் ஒரு பகுதிக்கும் அதிகமானோர் மத நம்பிக்கையாளர்கள் அல்லர் என்று கணக்கிடப்பட்டுள்ளது. உலகிலுள்ள எந்தவொரு மதத்திலுமுள்ள அங்கத்தினர்களின் எண்ணிக்கையைவிட அதிகமாகும் இது. கடவுளிடம் நம்பிக்கை இழப்பவர்களின் எண்ணிக்கை தினமும் அதிகரித்துக் கொண்டே இருக்கின்றது.

இன்று உள்ள மதங்களில் பலவும் அழிவின் அருகில்தான் இருக்கின்றன. அதிக உறுப்பினர்களையுடைய மதம் என்று உரிமை கொண்டாடுகின்ற கிறித்துவ மதம் கூட மூவாயிரத்துக்கும் அதிகமான மதங்களாகப் பிரிந்து ஒன்றையொன்று அடித்துக் கொள்கின்றன. அய்ரோப்பாவில் பல இடங்களிலும் பக்தர்கள் கிடைக்காமல் தேவாலயங்களைப் பூட்டத் தொடங்கியிருக்கின்றனர். புரோகிதர்களாகத் தேவையான அளவு ஆள்கள் கிடைக்காமல் ரோமன் கத்தோலிக்க சபை கவலைப்படுகின்றது. சீனாவில் கன்ஃப்யூஷியன் மதமும் தாவோ மதமும் இதைவிடத் துயரமான கட்டத்தில் இருக்கின்றன.

இந்தியாவில் இந்து மதத்துக்குப் புத்துயிரளிக்க ஏராளமான முயற்சிகள் நடைபெறுகின்றனவல்லவா. இந்து மதம் அழிவு நிலையில் இருக்கின்றது என்பது அதன் தலைவர்களுக்குத் தெரிந்ததுதான் அதற்குக் காரணம். ஜைன மதம், சரதுஷ்ட மதம் ஆகியவை உறுப்பினர் எண்ணிக்கையில் மிகவும் குறைந்துவிட்டது. இஸ்லாம் மதத்திலும் புதிய உள்பிரிவுகளும் உள்போர்களும் ஏற்பட்டுள்ளன. நம்முடைய காலகட்டத்தில் இல்லாவிட்டாலும், மிகத் தொலைவிலில்லாமல், எதிர்காலத்தில் இன்றிருக்கின்ற மதங்களும் வரலாற்றில் வெறும் நினைவாகவே எஞ்சிவிடும்.

-----------------------நூல்: ‘மதமும் பகுத்தறிவும்’, மலையாளத்திலிருந்து தமிழில்: அமலா

6.12.09

பெரியார்-அண்ணா பிறந்த நாள் விழாவை நாம் கொண்டாடுவதன் நோக்கம்

உங்கள் நாட்கள் எண்ணப்படுகின்றன- காங்கிரஸ் எம்.எல்.ஏ
என் அடியை அளந்து வைக்கிறேன்-அண்ணா
பெருந்தன்மை, இரக்க குணம் கொண்ட அண்ணா பற்றி தமிழர் தலைவர் விளக்க உரை

உங்கள் நாள்கள் எண்ணப்படுகின்றன என்றார் காங்கிரஸ் எம்.எல்.ஏ, என் அடியை அளந்து வைக்கிறேன், என்றார் அண்ணா பெருந்தன்மை, இரக்க குணம் கொண்ட அண்ணா பற்றி தமிழர் தலைவர் கி. வீரமணி அவர்கள் விளக்கி பேசினார்.

குவைத்தில் திராவிடர் கழக தலைவர் தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்கள் 16.10.2009 ஆற்றிய உரையின் 28.11.2009 அன்றைய தொடர்ச்சி வருமாறு:

அண்ணா அவர்களைப் பற்றி மேலும் தெரிந்து கொள்ள தொடர்ந்து பல கருத்தரங்கங்களை நடத்த வேண்டும் என்று திராவிடர் கழக தலைவர் தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்கள் கூறி விளக்கவுரையாற்றினார்.

அண்ணா அவர்களது ஆங்கிலப் பேச்சு எல்லாவகையிலும் சிறப்பானதாக இருக்கும். நாடாளுமன்றத்தில் அண்ணா பேசுகிறார்

பண்டித நேரு அவர்கள் நாடாளுமன்றத்திலே பேசிக்கொண்டிருக்கிறார். அப்பொழுது எதிர்க் கட்சியினர் அமர்ந்து உன்னிப்பாக கேட்டுக்கொண்டிருக்கிறார்கள்.

மொழிப்பிரச்சினை பற்றி அப்பொழுது பேசப்படுகிறது. மெஜாரிட்டி மக்கள் பேசுகிற மொழி இந்தி மொழி தான். ஆகவே நீங்கள் இந்தியை ஏற்றுக்கொள்வதில் என்ன தவறு என்று நேரு இந்தி பேசாத மாநில எம்.பிக்களைப் பார்த்துப் பேசினார்.

அண்ணா அவர்கள் அதற்கு ஆங்கிலத்திலே உதாரணத்தோடு பதில் அளித்து சொன்னார் இந்தியாவின் தேசிய பறவை எது என்று நீங்கள் தேர்ந்தெடுத்திருக்கிறீர்கள்?.

இந்தியாவில் பெரும்பான்மையாக இருப்பது காக்கைகள்தான் (கைதட்டல்). ஆனால் நீங்களோ மயிலைத் தான் தேர்ந்தெடுத்திருக்கிறீர்கள்.

ஆகவே இந்த மொழிப் பிரச்சினையில் பெரும்பான்மை, சிறுபான்மை என்பது முக்கியமல்ல என்று விளக்கமளித்தார். அண்ணா அவர்கள் பேசும்பொழுது நேரமாகிவிட்டது என்று சபாநாயகர் மணி அடித்தார்.

எங்களுடைய நேரத்தையும் எடுத்துக்கொள்ளட்டும் உடனே எதிர்கட்சித் தலைவர் பூபேஷ்குப்தா மற்றவர்கள் எழுந்து சொல்லுகிறார்கள். எங்களுடைய நேரத்தையும் அண்ணா அவர்களுக்குக் கொடுக்கின்றோம்.

அவர் பேசட்டும் என்று சொன்னார்கள். பாராளுமன்ற வரலாற்றிலே இவைகள் எல்லாம் ரெக்கார்டாக இருக்கிறது. அண்ணா அவர்களின் ஆங்கில கருத்துகளால் அனைவரும் ஈர்க்கப்பட்டனர்.

அதே போல தமிழக சட்டமன்றத்திலும் கூட அண்ணா அவர்கள் பதற்றமில்லாமல் பேசியவர் அது ஆங்கிலமாக இருந்தாலும், தமிழாக இருந்தாலும் பதற்றமில்லாமல் பேசக் கூடியவர்.

முதலமைச்சர் அண்ணா சட்டமன்றத்திலே இருக்கின்றார். எதிர்கட்சித் துணைத் தலைவர் காங்கிரஸ் கட்சியைச் சார்ந்த நண்பர் விநாயகம் ஆத்திரப்பட்டு கோபத்தோடு அண்ணா அவர்களைப் பார்த்து சொல்லுகின்றார்.

உங்கள் நாட்கள் எண்ணப்படுகின்றன

Your days are numbered என்று. நண்பர்களே! அந்த நேரத்திலே அண்ணா அவர்கள் உடல் நிலை சரியில்லாத நிலையில் இருக்கின்றார். அந்த நிலையிலே அண்ணா அவர்களுடைய மனதை புண்படுத்த வேண்டும் என்ற நோக்கில் அவர் இரண்டு அர்த்தத்தில் இப்படிச் சொல்லுகின்றார். தி.மு.க எம்.எல்.ஏக்கள் எல்லாம் காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் விநாயகம் பேசியதைப் பார்த்து ஆத்திர மடைகின்றனர்.

விநாயகம் பேசியது ஆட்சியையும் குறிக்கும், அண்ணாஅவர்களுடைய ஆயுளையும் குறிக்கும். அண்ணா மற்றவர்களை கையமர்த்திவிட்டு சொன்னார். My steps are measured என்று (பலத்த கைதட்டல்). என்னுடைய ஒவ்வொரு அடியையும் அளந்து வைக்கிறேன். அதனால் எனக்கொன்றும் குறைவு வராது. பல பதில்கள் அண்ணா அவர்களிடமிருந்து நகைச்சுவையாக வரும்.

சட்டமன்றத்திலே அண்ணா அவர்கள் கலகலப்பை உண்டாக்குவார். காங்கிரஸ்காரர்கள் வேகமாக கேட்பார்கள் விலைவாசியைப் பற்றி. சட்டமன்றத்திலே பொருள்களின் விலையை படித்துக் கொண்டே வந்தார் அண்ணா. உடனே காங்கிரஸ்காரர் வம்புக்காக ஒரு கேள்வியை எழுந்து கேட்டார்,

புளி விலை குறைந்தது யாருடைய சாதனை?

புளி விலை குறைந்திருக்கிறதே அது யாருடைய சாதனை என்று காங்கிரஸ் கட்சி உறுப்பினர் அண்ணா அவர்களைப் பார்த்துக்கேட்டார்.

அதற்கு முன்னாலே இருந்த எங்களுடைய ஆட்சியின் சாதனை என்று தான் சொல்லுவார் என்று எதிர்பார்த்தார்கள். உடனே அண்ணா அவர்கள் பளிச்சென்று பதில் சொன்னார்,

அது புளியமரத்தின் சாதனை என்று சொன்னார்கள் (கைதட்டல்). அவ்வளவு நகைச்சுவையாகப் பதில் சொல்லுவார். இப்படி எல்லா துறைகளிலும் அண்ணா அவர்கள் பதில் சொன்னார். அவர் மாதிரி தனித்தன்மையுடன் பதில் சொல்லக்கூடிய ஆற்றல் வேறு எவருக்கும் கிடையாது. மிகப் பெரியவராகத் திகழ்ந்தவர் அண்ணா.

காரணம், தந்தை பெரியார் அவர்களிடத்திலே அவர் பயின்ற பாடம். அதனாலே அவர் பெற்ற மிகப்பெரிய வெற்றி.

அண்ணா தலைச்சிறந்த மனிதாபிமானி அதோடு மட்டுமல்ல; அண்ணா அவர்கள் தலைசிறந்த ஒரு மனிதநேயர். பதவிகள் வரும் போகும். பட்டங்கள் வரலாம், பெறலாம். பதவியாளர்கள் இருக்கின்றார்கள். மனிதர்களைத் தேடுகின்ற நேரத்திலே கிடைப்பதில்லை.

அந்த மாதிரி நம்முடைய சமுதாயத்தில் ஒரு பிரச்சினை. மாமனிதராக அண்ணா அவர்கள் திகழ்ந்தார்கள். அண்ணா அவர்களுடைய உள்ளம் இரக்க உள்ளம். அண்ணா அவர்களுடைய எழுத்துகள் அவருடைய இரக்க உள்ளத்தைப் பிரதிபலித்திருக்கிறது.

எதையும் தாங்கும் இதயம் வேண்டும். என்று அண்ணா அவர்கள் அற்புதமான ஒரு சொற்றொடரை எடுத்துச் சொன்னார்கள்.

போப்பை சந்திக்க அண்ணாவுக்கு விருப்பம்

ஒரே ஒரு செய்தியைச் சொல்லி என்னுடைய உரையை நிறைவு செய்ய விரும்புகின்றேன். முதலமைச்சர் அண்ணா அவர்கள் அமெரிக்காவுக்குச் சென்று விட்டுத் திரும்புகிறார். அண்ணா அவர்களுக்கு ஒரு விருப்பம். ரோமாபுரி தலை நகரமான வாடிகன் தலைநகரிலே இருக்கின்ற போப் ஆண்டவரைப் பார்க்க வேண்டும் என்று.

உடனே அதற்கு ஏற்பாடு செய்கிறார்கள். அண்ணா அவர்களோ ஒரு பகுத்தறிவுவாதி. இவர் என்ன போப் ஆண்டவரிடம் போய் பேசப் போகிறார் என்று கேள்வி. அண்ணா அவர்கள் வாடிகன் போப் அவர்களை சந்திக்கச் செல்லுகின்றார். போப் அவர்கள் அண்ணா அவர்களை வரவேற்கின்றார்.

இரண்டு பேருமே மரியாதையோடு பேசிக் கொண்டார்கள். அப்பொழுது போப், உங்களுக்கு ஏதாவது தேவையா, என்று கேட்டார். ஒன்றுமில்லை. ஒரு சிறு விண்ணப்பம் என்று அண்ணா அவர்கள் சொன்னார்.

ஆயுள் தண்டனை கைதி ரானடே

போர்த்துகீசிய அரசாங்கம், கோவாவைச் சேர்ந்த ரானடே என்பவர் அரசாங்கத்தை எதிர்த்தார் என்பதற்காக அந்தத் தோழருக்கு ஆயுள் தண்டனை கொடுத்தது.

ரானடே என்ற அந்தத் தோழர் போர்த்துகீசிய சிறையிலே வாடிக்கொண்டிருக்கின்றார். தயவு செய்து உங்களால் முடிந்தால் கருணை காட்டுங்கள். அவர் ஏழு ஆண்டுகளுக்கு மேல் சிறையில் இருந்து விட்டார். ஆயுள் தண்டனை என்றால் அவர் சிறையிலேயே மறைந்து போகக் கூடிய வாய்ப்பு ஏற்படும்.

எனவே போப் ஆண்டவர் அவர்களே! அவரை நீங்கள் விடுதலை செய்ய உதவ வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

அண்ணா அவர்களுக்கு அறிமுகமாகாதவர் ஏனென்றால், அந்த நாடு கத்தோலிக்க நாடு போப் அவர்களே உங்களுடைய அதிகாரத்தைப் பயன்படுத்தி ரானடே மனிதரை விடுதலை செய்ய உதவி செய்யுங்கள்; அந்த மனிதரின் உயிரைக் காப்பாற்ற உதவுங்கள் என்று கேட்டுக்கொண்டார். போப் அவர்கள் அதைச் செய்தார். ரானடே என்பவர் எங்கோ இருக்கக் கூடியவர். அண்ணா அவர்களுக்கு முன்பின் அறிமுகமாகாதவர். செய்தியைப் படித்துவிட்டு அந்த உணர்வுகளை போப் அவர்களிடம் சொல்லுகின்றார். மற்றவர்களாக இருந்தால் போப் அவர்களிடம் இது கொடுங்கள்; அது கொடுங்கள் என்று கேட்டிருப்பார்கள். ஆனால் அண்ணா அவர்கள் அப்படி எதையும் கேட் கவில்லை. போப் உத்தரவிட்டார்

போப் அவர்கள் உத்தரவால் ரானடே அவர்களை உடனே விடுதலை செய்தார்கள். தனக்கு அறிமுகமே இல்லாத ஒரு தலைவர் எனக்காக வாதாடினார் என்றால் நான் எவ்வளவு நன்றி உள்ளவனாக இருக்க வேண்டும். என்று ஓடோடி அண்ணா அவர்களைப் பார்த்து நன்றி சொல்ல தமிழ்நாட்டிற்கு ரானடே வந்தார். அப்போது அண்ணா உயிருடன் இல்லை. அவருடைய நினைவிடத்திற்குச் சென்றார் ரானடே.

அண்ணா புதைந்துபோனார்; ரானடே கதறி அழுதார்

அண்ணா புதைந்து போனார். ரானடேவோ கதறி அழுதார். இந்தக் காட்சிகள் எல்லாம் எதைச் சொல்லுகின்றன. மனிதநேயத்தின் மறு உருவமாக அண்ணா அவர்கள் திகழ்ந்தார்கள். அப்படிப்பட்ட அண்ணா அவர்களுடைய நூற்றாண்டு விழாவை நாம் கொண்டாடுவது வெறும் விழாக் கோலத் திற்காக அல்ல, வெளிச்சம் போட்டு நாம் கொண்டாடுவது வெறும் விழாக்கோலம் காண்பதற்காக அல்ல.

சாமான்யர்களின் சகாப்தத்தை மாற்ற

எந்தக் கொள்கைக்காக எந்தச் சமுதாய மாற்றத்திற்காக, நான் ஒரு சாமான்யன் என்னைப் போன்ற சாமான்யர்களுடைய சகாப்தத்தை மாற்ற வேண்டும் என்று கருதினார்களோ அதற்காகவே தன்னுடைய வாழ்நாள் முழுக்க பாடுபட்டவர் அண்ணா.

நாம் அனைவரும் அண்ணாவைப் பாராட்டுவது பெருமை அல்ல, முக்கியமல்ல. அண்ணா அவர்களுக்கு நாம் செய்யும் மரியாதை, சிறப்பு. தந்தை பெரியார் அவர்களுடைய பிறந்த நாள் விழாவை நாம் கொண்டாடுவதன் நோக்கம் அவர்கள் எல்லாம் எந்தக் கொள்கைக்காக வாழ்ந்தார்களோ, அந்தக் கொள்கையை நாமும் கடைப்பிடிப்போம், ஏற்போம் என்று கூறி இந்த நிகழ்ச்சியில் இவ்வளவு பொறுமையாக அமர்ந்து கேட்ட உங்கள் அனைவருக்கும் நன்றி சொல்லி அண்ணாவைப் பற்றி இன்னும் தெரிந்து கொள்ள ஆழமான கருத்தரங்கங்கள் தேவை. அதனை சிறப்பாக நடத்துங்கள் என்று கூறி, நீண்டநேரம், உட்கார்ந்திருக்கின்றதானது அனைவரின் பெருந்தன்மையையும், மனிதத் தன்மையையும் காட்டுகிறது என்று கூறி என்னுடைய உரையை நிறைவு செய்கின்றேன்.

நன்றி, வணக்கம். இவ்வாறு திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி அவர்கள் உரையாற்றினார்.

---------------------"விடுதலை" 2-12-2009



பெரியார் நீதிமன்றத்தில் அளித்த வாக்குமூலம் என்ன தெரியுமா?

பெல்லாரி

‘1938 டிசம்பர் 5,6 ஆகிய நாள்கள் தமிழ்நாட்டின் வரலாற்றில் குறிப்பிடத்தகுந்த நாள்கள்! ஆம். இந்நாளில்தான் தந்தை பெரியார் இந்தி எதிர்ப்புக்காக நீதிமன்றத்தில் தோன்றி வழக்குகளைச் சந்தித்தார்.

நவம்பர் 13-இல் சென்னையில் பெண்கள் மாநாடு கூட்டி “பெரியார்” என்ற பட்டத்தை வழங்கி வரலாற்றில் இடம் பெற்றனர் மாதர் குல மாணிக்கங்கள். இந்தி எதிர்ப்புக்களத்தில் பெண்களை மறியல் செய்யத் தூண்டினார் என்ற குற்றச்சாற்றின் பேரில் தந்தை பெரியார்மீது வழக்குத் தொடுக்கப்பட்டது.

1938டிசம்பர் 5,6 நாள்களில் சென்னையில் ஜார்ஜ் டவுன் நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்றது. சர். ஏ.டி. பன்னீர்செல்வம், ராஜா சர். முத்தையா செட்டியார் போன்ற வர்கள் எதிர் வழக்காட வேண்டும் என்று எவ்வளவோ கேட்டுக் கொண்டும் தந்தை பெரியார் மறுத்து விட்டார். எழுத்து மூலம் நீதிபதியிடம் ஓர் அறிக்கை கொடுத்ததோடு தமது கடமையை முடித்துக் கொண்டார். அது வாக்கு மூலமா? தண்டனையைக் கொடுக்கச் சொல்லித் தூண்டக்கூடிய சொற்றொடர்களா? இதோ தந்தை பெரியார் பேசுகிறார்.

“”இந்தக் கோர்ட் காங்கிரஸ் மந்திரிகள் நிர்வாகத்திற்கு உட்பட்டது.

நீதிபதியாகிய தாங்களும் பார்ப்பன வகுப்பைச் சேர்ந்தவர்கள்; இவை தவிர, இந்தி எதிர்ப்புக் கிளர்ச்சியை ஒழிக்க வேண்டும் என்பதில் காங்கிரஸ் மந்திரிகள், அதி தீவிர உணர்ச்சி கொண்டிருக்கிறார்கள். அது விஷயத்தில் நியாயம், அநியாயம் பார்க்க வேண்டியதில்லையென்றும், கையில் கிடைத்த ஆயுதத்தை எடுத்து உபயோகித்து ஒழித்தாக வேண்டுமென்றும், இந்தி எதிர்ப்புக் கிளர்ச்சியை திடீரென்று வந்து புகுந்த திருடர்களுக்கு ஒப்பிட்டு கனம் முதல் மந்திரியார் இந்தி எதிர்ப்பு விஷயமாய் மந்திரிகள் எடுத்துக் கொள்ளும் நடவடிக்கைகள் அடக்குமுறையே என்பது எனது கருத்து. அடக்கு முறைக் காலத்தில் இம்மாதிரி கோர்ட்டுகளில் நியாயத்தை எதிர்பார்ப்பது பைத்தியக்காரத்தனம்.

ஆகவே கோர்ட்டார் அவர்கள் தாங்கள் திருப்தி அடையும் வண்ணம் எவ்வளவு அதிக தண்டனை கொடுக்க முடியுமோ, அவைகளையும், பழி வாங்கும் உணர்ச்சி திருப்தி அடையும் வரைக்கும், எவ்வளவு தாழ்ந்த வகுப்பு கொடுக்க உண்டோ அதையும் கொடுத்து, இவ்வழக்கு விசாரணை நாடகத்தை முடித்து வைக்கும்படி வணக்கமாகக் கேட்டுக் கொள்கிறேன். எவ்வளவு நியாயமான லட்சியத்தை அடைய வேண்டுமானாலும் அதற்காகக் கஷ்ட நஷ்டங்களடைதல் என்னும் விலை கொடுக்க வேண்டுமாதலால் அவ்வளவு வேண்டிக் கொள்கிறேன்” என்றார். தந்தை பெரியார்.

நீதிமன்றத்தில் இப்படியெல்லாம் கூறிய தலைவர் தந்தை பெரியாரன்றி வேறு ஒரு வரும் உண்டோ!

நீதிபதி தீர்ப்புக் கூறினார்:

செய்த குற்றங்கள் இரண்டு. ஒவ்வொன்றுக்கும் ஒவ்வோராண்டு கடுங்காவல், ஒவ்வோராயிரம் ரூபாய் அபராதம், அபராதம் செலுத்தாவிடில் மீண்டும் அவ்வாறு மாதம் தண்டனை; இரண்டு தண்டனைகளையும் தனித்தனி காலத்தில் அடைய வேண்டும்.

சிறைப்பறவை சிரித்துக் கொண்டே பெல்லாரி சிறைக்குச் சென்றது.

-------------------- மயிலாடன் அவர்கள் 6-12-2009 "விடுதலை" யில் எழுதிய கட்டுரை



பெரியாரைப்பற்றிச் சொல்லிக் கொடுக்காமல், சங்கராச்சாரியாரைப்பற்றியா சொல்லிக் கொடுக்க முடியும்?

சமச்சீர் கல்வித் திட்டம்: இந்துத்துவா வெறியர்களின்
எதிர்ப்பைப் பொருட்படுத்தவேண்டாம்!

பாடத் திட்டத்தில் புராணப் பகுதிகளை அகற்றுக! பகுத்தறிவுப் பட்டாளம்,
தமிழர்கள் துணை இருப்பார்கள் தமிழர் தலைவர் அறிக்கை

சமச்சீர் கல்வித் திட்டத்தில் இடம்பெறும் புதிய பாடப் பகுதிகளை எதிர்த்து இந்துத்துவா சக்திகள் கூச்சலிடுவதைக் கண்டித்தும், புதிய பாடத் திட்டத்தில் புராணங்களுக்கு இடம் இருக்கக் கூடாது என்று வலியுறுத்தியும் திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி அவர்கள் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:

தமிழ்நாட்டில் சமச்சீர் கல்வியை நடைமுறைப்படுத்து-வதற்கான அவசர சட்டத்தை ஆளுநர் பிறப்பித்துள்ளார். சமச்சீர் கல்வி வரும் 2010 ஆம் கல்வியாண்டில் முதல் மற்றும் ஆறாம் வகுப்புகளில் அறிமுகமாகிறது. 2011 இல் 2 ஆம் வகுப்பு மற்றும் 7 ஆம் வகுப்பிலும், 2012 இல் 10 ஆம் வகுப்புவரை சமச்சீர் கல்வி நடைமுறைக்கு வரும்.

மாநிலக் கல்வித் திட்டம், ஆங்கிலோ இந்தியன், மெட்ரிக்குலேஷன், ஓரியண்டல் ஆகிய நான்கு வகை யான கல்வி முறைகளை ஒருங்கிணைத்து மாநிலப் பொதுப் பள்ளிக் கல்வி வாரியம் தொடங்கப்படும் என்றும், அதேபோல ஒரே மாதிரியான பொதுப் பாடத் திட்டமும் கொண்டுவரப்படும் என்றும் அறிவிக்கப்பட்டு உள்ளது.

பொதுப் பாடத் திட்ட வரைவு இணைய தளத்திலும் வெளியிடப்பட்டுள்ளது.

வீண் கூச்சல் போடும் கூட்டம்

முழுமையான அளவு எதையும் தெரிந்துகொள்ளாமல் அரைவேக்காட்டுத் தனத்துடன் இந்து முன்னணி இராம. கோபாலன் வகையறாக்கள் கூச்சல் போட ஆரம்பித்துவிட்டனர்.

‘‘ஈ.வெ.ராவின் இந்து விரோதக் கொள்கையைத் தூக்கிப் பிடிக்க முதல்வர் முயல்கிறார், நாத்திகத்தை மாணவர்களிடம், திணிக்க சதி நடக்கிறது, இந்து மதத்தைக் கேவலப்படுத்தும் பாடங்கள் இடம்பெற்றுள்ளன.

மறுமலர்ச்சிப் பாடங்கள், விழிப்புணர்வுப் பாடங்கள், மூட நம்பிக்கை எதிர்ப்பு இவையெல்லாம் இடம் பெற்றுள்ளன. இவை எல்லாம்தான் சமச்சீர் கல்வியா? எந்தத் தைரியத்தில் இப்படி ஒரு வரைவுத் திட்டத்தை வைத்தார்கள்? அரசின் பிடியில் கல்வித் துறை சிக்கி சின்னா பின்னமாகிறது’’ என்றெல்லாம் திருவாளர் இராம.கோபாலன் ஒப்பாரி வைத்துள்ளார்!

கல்வி என்பது பழைமையின் குப்பைத் தொட்டியா?

மிக நீண்ட காலமாக நம் நாட்டுக் கல்வி என்பதில் பழைமையின் குப்பைத் தொட்டியாக, அரைத்த மாவையே அரைத்த பத்தாம் பசலித்தனமான, முரண்பாடுகள் நிறைந்த பாடத் திட்டங்கள்தான் இடம்பெற்றிருந்தன. இவையெல்லாம் பெரும்பாலும் பார்ப்பனிய சிந்தனையின் தாக்கமாகவே நெடியேறிக் கிடந்தன.

கால வளர்ச்சிக்கு ஏற்றதாகவோ, மாணவர்களின் ஆற்றலை வெளிக் கொணரும் தன்மை உடையதாகவோ இருந்ததில்லை. பெரும்பாலும் மனப்பாடம், நெட்டுரு என்பதுதான் கல்விக்கான தகுதியாகவும், திறமையாகவும் கருதவும்பட்டன.

இதில் ஒரு மாற்றம் வரும்போது ஆதிக்கக்காரர்களால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை என்பதுதான் உண்மையாகும்.

விஞ்ஞான மனப்பான்மையை வளர்க்கச் சொல்லுகிறது இந்திய அரசமைப்புச் சட்டம்; மந்திரங்களை அர்த்தம் புரியாமல் உருப்போட்டு ஒப்பித்த பரம்பரையல்லவா அதில் மாற்றம் என்றால் குமுறத்தான் செய்யும்.

இந்திய அரசமைப்புச் சட்டத்தில் அடிப்படைக் கடமைகள் என்னும் பகுதியில் ‘51ஏ’ உள்பிரிவு ‘எச்’ என்ன கூறுகிறது?

மக்களிடையே விஞ்ஞான மனப்பான்மையைத் தூண்டிட வேண்டும், ஆய்வு மனப்பான்மை, மனிதாபி-மானம், சீர்திருத்த உணர்வுகள் ஊட்டப்பட வேண்டும் என்று தெளிவாகக் கூறப்பட்டுள்ளதே!

இது ஒவ்வொரு குடிமகனின் அடிப்படைக் கடமை என்று வலியுறுத்தப்பட்டுள்ள நிலையில், அதனைத் தொடக்கப் பள்ளியில் இருந்துதானே விதைத்து வளர்த்து மேலே கொண்டு வரவேண்டும், கல்வித் திட்டம் இந்தத் திசையில்தானே அமையவேண்டும்?

இதை விட்டுவிட்டு இன்னும் “பித்தா பிறைசூடி பெருமானே!’’ என்று செய்யுளை மனப்பாடம் செய்யச் சொன்னால், மாணவர்கள் மத்தியிலே எப்படி விஞ்ஞான மனப்பான்மை வளர முடியும்?

சந்திரயான் யுகத்தில் பித்தா பிறைசூடியா?

‘சந்திரயான்’ யுகத்திலே சிவபெருமானின் தலையில் சந்திரன் இருக்கிறான், பிறையைச் சூடிக் கொண்டிருக்கிறான் என்று சொல்லிக் கொடுக்கலாமா? மதச் சார்பற்ற அரசின் பாடத் திட்டத்தில் கடவுள் வாழ்த்துத் தேவையில்லைதான். அப்படியே வைத்தாலும் எந்த மதத்தைச் சார்ந்த வாழ்த்தை வைப்பது?

பள்ளிக்குச் செல்லுவது உண்மையையும், அறிவியலையும் கற்றுக் கொள்வதற்கா? மூடத்தனங்களை மூளைக்குள் திணித்துக் கொள்வதற்கா? கல்வியில் மதம் கலக்கவே கூடாது; தேவையானால், தனியே படிக்கட்டும்!

பகுத்தறிவு என்றாலே ஒவ்வாமை என்று கருதும் கூட்டத்தின் கூக்குரலையெல்லாம் அரசு பொருட்படுத்தத் தேவையில்லை. எந்த ஒரு மாற்றத்தையும், வளர்ச்சியையும் விரும்பாத ஒரு கூட்டம் எப்பொழுதும் இருந்துகொண்டுதானிருக்கும்.

பெரியாரைப்பற்றிச் சொல்லிக் கொடுக்காமல், சங்கராச்சாரியாரைப்பற்றியா
சொல்லிக் கொடுக்க முடியும்?

சமூகப் புரட்சி வரலாற்றில், சமூகநீதி வரலாற்றில் பெண்ணுரிமைப் பிரச்சினையில் தந்தை பெரியார் அவர்களைப்பற்றிச் சொல்லிக் கொடுக்காமல், ‘‘தீண்டாமை க்ஷேமகரமானது’’ என்று கூறும் சங்கராச்சாரியார்களைப்பற்றியா பிள்ளைகளுக்குப் பாடம் சொல்லிக் கொடுக்க முடியும்?

தெரசாவைப்பற்றி பாடம் என்றால் உடனே ஒரு கூட்டத்திற்கு நினைப்பெல்லாம், அவர் கிறிஸ்துவர் என்பது-தான்; அவர் ஆற்றிய மனிதத் தொண்டறம்பற்றியெல்லாம் அவர்களின் கவனத்துக்கு வராது. அவருக்கு நோபல் பரிசு அளிக்கப்பட்டபோதுகூட அது ஒரு கிறிஸ்துவ சதி என்று சொன்னவர்களிடம் வேறு எந்த விரிந்த பார்வையை எதிர்பார்க்க முடியும்?

பொதுவாக கல்வி வளர்ச்சி அடைவதில் பார்ப்பனர்களுக்கு எப்பொழுதுமே நல்ல எண்ணம் கிடையாது. சூத்திரனுக்கு எதைக் கொடுத்தாலும் கல்வியைக் கொடுக்காதே என்பது தானே அவர்களின் மனுதர்மம்.

குலக்கல்வித் திட்டம்தான் வேண்டுமா?

சக்ரவர்த்தி ராஜகோபாலாச்சாரியார் இரண்டு முறை ஆட்சிப் பொறுப்புக்கு வந்துள்ளார். 1937_39 இல் ஒருமுறையும், 1952_54 இல் இன்னொரு முறையும்; அந்த இரண்டு முறையும்கூட இருந்த பள்ளிக் கூடங்களை இழுத்து மூடியவர்தானே அவர்? 1937 இல் 2500 ஆரம்பப் பள்ளிகளையும், 1952 இல் 6000 ஆரம்பப் பள்ளிகளையும் இழுத்து மூடிய ‘மகானா’யிற்றே!

1952 இல் குலக்கல்வித் திட்டம் கொண்டு வந்து அப்பன் தொழிலை மகனும் படிக்கவேண்டும் என்று சட்டம் போட்டவராயிற்றே!

தந்தை பெரியார் தலைமையில் வெகுண்டெழுந்த தமிழினம் ஆச்சாரியாரைப் பதவியை விட்டு ஓடச் செய்யவில்லையா?

இன்னும் அந்த மிச்ச சொச்சங்கள் நாட்டில் இருக்கின்றன என்பதற்கு அடையாளம்தான் சமச்சீர் கல்விக்கு எதிரான கூச்சல்கள். இதற்கெல்லாம் தமிழக அரசு செவி கொடுக்கவேண்டிய அவசியமில்லை. இன்னும் சொல்லப்போனால், இத்தகையவர்களின் எதிர்ப்புதான் இந்தக் கல்வித் திட்டம் மிகச் சரியாகவே இருக்கிறது என்பதற்கான அளவுகோல்கூட!

வேத கணிதம் கற்கச் சொன்னவர்கள்தானே?

சமச்சீர் கல்வித் திட்டத்தைக் குறை கூறும் இவர்கள் யார்? பல்கலைக் கழகங்களில் வேத கணிதத்தையும், போலி விஞ்ஞானமான சோதிடத்தையும், புரோகித மந்திரங்களையும் பாடத் திட்டங்களில் வைத்தவர்கள்தானே? இந்திய வரலாற்றுக் கழகத்தில் கே.எம். பணிக்கர், சுமித் சர்க்கார் போன்ற புகழ்பெற்ற வரலாற்று ஆசிரியர்களையெல்லாம் நீக்கிவிட்டு அந்த இடங்களில் எல்லாம் ஆர்.எஸ்.எஸ்.காரர்களாகத் தட்டிப் பார்த்து நியமனம் செய்தவர்கள்தானே!

உத்தரப்பிரதேசத்தில் இவர்கள் வகுத்த
பாடத் திட்டங்கள் எல்லாம் என்ன?

“பாபர் மசூதியை இடிக்கும் முயற்சிகள் நடந்தபோது முலாயம் சிங் யாதவைச் சேர்ந்த ஆட்களின் துப்பாக்கிக் குண்டுகளால் எத்தனை இந்துக்கள் கொல்லப்பட்டனர்? (‘அவுட் லுக்’, 10.5.1999).

இந்த யோக்கியர்கள்தான் தமிழ்நாடு அரசு அறிமுகப்படுத்தும் பாடத் திட்டங்களின் இந்து மத எதிர்ப்புக் கருத்துத் திணிக்கப்படுவதாகப் புலம்புகிறார்கள். ஒட்டகம் ஓணானைப் பார்த்துப் பாடம் படிப்பதா?

புராணங்கள் தேவையில்லை

நமது கல்வி அமைச்சர் வெளியிட்ட அறிக்கையில்கூட, திருவாசகம், தேவாரம், நாலாயிர திவ்விய பிரபந்தம், பெரிய புராணம் மற்றும் கம்ப இராமாயணம் ஆகியவை இணைக்கப்பட்டுள்ளன என்று குறிப்பிட்டுள்ளார். புராணங்கள் வரலாறு அல்ல மூடக் குப்பைகள்! அதுவே நமக்கு உடன்பாடில்லாதவைதான்.

இந்தப் பழங்குப்பைகள் எல்லாம் தேவையில்லை என்பது நமது அழுத்தமான கருத்தாகும். இவை ஜாதி உணர்வையும், மதமாச்சரியங்களையும், மூட நம்பிக்கைகளையும் தூண்டக் கூடியவை கட்டிக் காக்கக் கூடியவை!

மகனைக் கொன்று கறி சமைத்து சிவனடியார்க்கு விருந்தளித்த இயற்பகை நாயனாரின் கதைகள் (பெரிய புராணம்) தேவைதானா? மூடத்தனமும், கொலைப் பாதகமும் கொண்டதல்லவா இது?

வெறுப்போடு சமணர் முண்டர் என்று தொடங்கும் நாலாயிர திவ்விய பிரபந்தத்தின் பாடல் என்ன சொல்லுகிறது? சமணர்களின் தலையை ஆங்கே அறுப்பதே தருமங்கண்டாய், அரங்கமா நகருள்ளானே என்பதெல்லாம் தேவைதானா?

முதலையுண்ட பாலகனை மீட்டதெல்லாம் நம்பக்கூடியதுதானா?

தேவாரம் மட்டுமென்ன? அதிலும் சமண, பவுத்தர்களின் அழகிய பெண்களைக் கற்பழிக்க அருள்புரிவாயாக என்று ஆண்டவனிடம் மனுப்போடவில்லையா?

முதலையுண்ட பாலகனை உயிர்ப் பிழைக்க வைத்ததாகக் கூறுவதும், எலும்பாகி போன பெண்ணுக்கு உயிர் கொடுத்ததெல்லாம் நம்பத் தகுந்ததுதானா? அறிவுக்குப் பொருந்தக்கூடியவைதானா?

பகுத்தறிவுவாதிகளின் பார்வையில்...

நியாயமாக பகுத்தறிவுவாதிகள் எதிர்க்கவேண்டிய பகுதிகள் இருக்கின்றன என்பதுதான் உண்மை.

மாறாக, ஒன்றிரண்டு முற்போக்கான புதிய பகுதிகள் இடம்பெறுகின்றன என்பதற்காக எதிர்ப்பது, மிரட்டுவது என்றால், அவற்றைச் சந்திக்க நாங்களும் தயார்தான்! அரசு தன் கடமையைச் செய்யட்டும்! இந்த உருட்டல், மிரட்டல் பேர்வழிகளைச் சந்திப்பதற்குப் பகுத்தறிவுப் பட்டாளம் தயாராகவே இருக்கிறது; ஏன், தமிழ் மக்களே இருக்கிறார்கள். கவலையில்லாமல் பயணம் தொடர்க! தமிழக அரசின் சமச்சீர் கல்வித் திட்டத்தை எக்காரணம் கொண்டும் பின்வாங்கக் கூடாது.

தலைவர்,
திராவிடர் கழகம்.

---------------------"விடுதலை" 5-12-2009



ஆத்மா பற்றி புத்தர்: அம்பேத்காரின் ஆய்வு சொல்வதென்ன?


டிசம்பர் 6: அம்பேத்கார் நினைவுநாள்

ஆத்மா பற்றி புத்தர்: அம்பேத்காரின் ஆய்வு சொல்வதென்ன?

வாழ்க்கை ஒரு துக்கம். சாவு ஒரு துக்கம். மறுபிறப்பு ஒரு துக்கம். இப்படி எல்லாமே துக்கம். இந்தத் துக்கத்திற்கெல்லாம் காரணம் என்ன என்றால் ஆசைதான் என்று முடிச்சுப் போட்டுச் சொல்லிவிட்டார்கள். ஆசையைத் துறக்கச் சொன்னார் புத்தர் என்று நான்கைந்து வார்த்தைகளைக் கணக்குகளில் எழுதுகிற மாதிரி சொல்லிவிட்டார்கள்.

எல்லாமே துக்கமயம். எல்லாமே சோக மயம். எதுவும் இன்பமயம் அல்ல என்று ஒரு தத்துவத்தைச் சொன்னால் அந்தத் தத்துவம் எப்படி மனித குலத்திற்குப் பயன்படும் என்று அம்பேத்கர் அவர்கள் கேள்வி கேட்டார். ஒரு மனிதன் பிறந்ததிலிருந்து சாகின்ற வரை துக்கம் என்றால் இதைப் போக்குவதற்கு ஒரு வழியே கிடையாது என்றால் இதுதான் மதம் என்றால் அந்த மதம் எப்படி ஒரு மனிதனைக் காப்பாற்ற முடியும்? அல்லது புத்தர் தான் எப்படிக் காப்பாற்ற முடியும்? என்று ஒரு கேள்வியைக் கேட்கின்றார். இந்தக் கேள்வியை எல்லாம் கேட்டு விட்டு, சிந்திக்க வேண்டும் என்று சொல்லுகின்றார் அம்பேத்கர்.

நான்கு அரிய உண்மைகள் என்ற ஏதோ ஒரு மேலான வார்த்தையைப் போட்டுச் சொல்லுகின்றார்கள். இவைகளை எல்லாம் இப்படிச் சொன்னால் புத்தக் கொள்கையை ஏற்றுக் கொள்வதற்கு மற்றவர்கள் எப்படி வருவார்கள்? என்று இதிலே தெளிவாக அவர் கேள்வி கேட்கின்றார்.

கர்மா, மறுபிறப்பு என்பதைப்பற்றிக் கேள்வி கேட்கின்றார். புத்தர் கடவுள் என்று சொல்கின்றார்கள். அதன் பிறகு அவரும் ஆத்மாவை நம்பினார். கர்மாவை ஏற்றுக் கொண்டார். அவரும் மறுபிறப்பைப் பற்றிச் சொன்னார் என்று மற்றவர்கள் சொன்னார்கள்.

ஆத்மாவை ஒரு போதும் நான் ஏற்றுக் கொள்ள மாட்டேன் என்று மறுத்தவர்தான் புத்தர். தந்தை பெரியார் அவர்களுடைய கருத்தும், அம்பேத்கர் அவர்களுடைய கருத்தும், புத்தருடைய கருத்தும் இவை எல்லாவற்றையும் பார்த்தீர்க-ளேயானால் ஒரே நேர்க்கோட்டில் தான் இருக்கும். ஏனென்றால் பொய்யைப் பொய் என்று சொல்லுகின்றார்கள். உண்மையை மெய் என்று சொல்லுகின்றார்கள்.

கடவுளைக்கூட ஒரு பக்கம் விட்டுவிடலாம். அது கூட சாதாரணம். அதனால் ஏற்படுகின்ற தீமை மிகவும் குறைவு. ஆனால் இந்த ஆத்மா நம்பிக்கையினால் ஏற்படுகின்ற தீமை இருக்கிறது பாருங்கள். அது பன்மடங்கு என்று டாக்டர் அம்பேத்கர் அவர்களே புத்தா அண்ட் ஹிஸ் தம்மா (The Buddha and His Dhamma) என்ற இந்த அற்புதமான விளக்க நூல்களிலே சொல்லுகின்றார்கள்.

பார்ப்பனர்கள் எந்த அர்த்தத்தில் ஆத்மா என்பதைப் பயன்படுத் தினார்களோ அந்த அர்த்தத்தில் புத்தர் பயன்படுத்தவில்லை என்று அம்பேத்கர் சொல்லுகின்றார்.

ஆத்மா என்பது இல்லை என்று சொல்லி விட்டால் அதையே மறுத்துவிட்டால் அதன் பிறகு கர்மாவுக்கு என்ன வேலை? மறுபிறப்புக்கு என்ன வேலை? அவற்றுக்கெல்லாம் இடம் கிடையாது என்று அம்பேத்கர் சொல்லுகின்றார்.

எனவே இப்படிப்பட்ட முரண்பாடுகளை எல்லாம் ஆராய வேண்டும் என்று அவர் எழுதிய கடைசி நூலான புத்தா அண்ட் ஹிஸ் தம்மா (The Buddha and His Dhamma) என்ற நூலின் முன்னுரையில் சொல்லுகின்றார்.

--------------ஆசிரியர் கி.வீரமணி எழுதிய டாக்டர் அம்பேத்கர் புத்தநெறியைத் தழுவியது ஏன்? நூலிலிருந்து...



5.12.09

பாபர் மசூதி இடிப்பும் - சங் பரிவார் வகையறாக்களும்


திமிரடி என்பது இதுதான்!

1992 டிசம்பர் 6 ஆம் தேதி அண்ணல் அம்பேத்கர் நினைவு நாளில் பா.ஜ.க. சங் பரிவார் காவிக் கும்பல் 450 ஆண்டு கால வரலாறு படைத்த சிறுபான்மை மக்கள் வழிபாட்டுத் தலமான பாபர் மசூதியை அயோத்தியில் இடித்துத் துவம்சம் செய்து குதூகலித்தது. உலகமே இது கண்டு நகைத்தது. இந்தியாவின் மதச் சார்பின்மையின் கண்ணியம் இதுதானோ என்று ஏளனம் செய்தது.

ஆண்டுகள் 17 ஓடிவிட்டன. குற்றவாளிகள் தண்டிக்கப்படவில்லை. அன்றைய பிரதமர் பி.வி.நரசிம்மராவ் வாக்குறுதி அளித்தபடி இடிக்கப்பட்ட இடத்தில் மசூதி மீண்டும் கட்டிக் கொடுக்கப்படவில்லை.

குதிரை கீழே தள்ளியதும் அல்லாமல் குழியும் பறித்த கதையாக, பாபர் மசூதி இடிப்பைத் தொடர்ந்து நாடெங்கும் மதக் கலவரங்களை உண்டாக்கி சிறுபான்மை மக்களின் உயிரைக் குடித்தார்கள்.

இந்த அளவில் பாதிக்கப்பட்ட சிறுபான்மை மக்களான முஸ்லிம்கள், தங்கள் ஆதங்கத்தை வெளிப்படுத்தித் தங்களின் உணர்வுகளைத் தெரிவிக்கவும், பாபர் மசூதி இடிக்கப்பட்ட அதே நாளில் நியாயம் கேட்டுக் குரல் எழுப்புவதிலும் அர்த்தம் உண்டு.

அதே நேரத்தில் அந்த நாளில் நாங்களும் போராட்டம் நடத்துவோம் என்று இந்து முன்னணி வகையறாக்கள் கூறுவது அவர்களின் மதவெறித் தனத்தின் கேவலத்தைப் பறைசாற்றுவதாகும்.

பாதிக்கப்பட்டவர்கள் உரிமைக்குரல் கொடுக்கிறார்கள் என்றால், அந்தப் பாதிப்புக்குக் காரணமானவர்கள் அதற்கு எதிராகக் குரல் கொடுக்க முனைவது எந்த வகையில் நியாயம்?

அடிபட்டவனுக்கு அழக்கூட உரிமையில்லையா? எந்த அளவுக்கு அராஜக புத்தியிருந்தால், இப்படியெல்லாம் செயல்பட முன்வருவார்கள்?

இந்துக்கள் பெரும்பான்மையினர்; முஸ்லிம்கள் எண்ணிக்கையில் சிறுபான்மையினர்தானே என்ன வேண்டுமானாலும் செய்துவிடலாம் என்கின்ற கொழுப்பா ஆணவமா?

இந்துக்களின் பிரதிநிதிகள் என்று இந்து முன்னணி வகையறாக்களை யார் ஏற்றுக் கொண்டார்கள்? இந்துக்களில் எத்தனை எத்தனை பிரிவுகள் உண்டு? காஞ்சிபுரத்தில் வரதராஜ பெருமாள் கோயிலில் யானைக்கு எந்த நாமம் போடுவது என்று சில நாள்களுக்கு முன்பு கூட தகராறு ஏற்பட்டதே, சில ஆண்டுகளுக்கு முன் ஒருவருக்கொருவர் சண்டை போட்டுக் கொண்டு தெருவில் கட்டிப் புரண்டார்களே!

ராமன் கோயில் விவகாரம் வைணவர்களைப் பொறுத்தது. இதில் சங்கராச்சாரியார் ஏன் தலையிடுகிறார் என்று கூட எதிர்க் குரல் கேட்டதே! திருப்பதி ஏழுமலையான் கோயில் கருவறைக்குள் காஞ்சி சங்கராச்சாரியார் சென்றது கூட பெரிய பிரச்சினையாக புயலாக வெடித்துக் கிளம்பியதே! இந்த நிலையில் இந்து முன்னணிக் கூட்டம் இந்துக்களுக்கெல்லாம் ஏகப் பிரதிநிதிகள் போல வஸ்தாதுக் காட்டுகிறார்களே!

இதுபோல் அடாவடித்தனமாகப் பேசுவது என்பது ராமகோபாலனுக்குக் கைவந்த கலை. அதன் மூலம் ஒரு தற்காலிக விளம்பரம் கிடைக்கும் அல்லவா? அதற்குத்தான் இந்தச் சில்லறை அறிக்கைகள்.

இந்திய அரசு ஒன்றை உணரவேண்டும். பாபர் மசூதி இடிப்பு என்பது மாபெரும் குற்றமாகும். இந்தியாவின் ஒட்டுமொத்த மரியாதையைக் கேவலப்படுத்தக் கூடிய செயலாகும். உலகில் மிகப் பெரிய எண்ணிக்கையில் இருக்கக்கூடிய இசுலாமியர்கள் மத்தியில் இந்தியாவுக்கு எதிரான உணர்வுகளை ஏற்படுத்தக்கூடியதாகும்.

குற்றவாளிகள் தண்டிக்கப்படாத காரணத்தால் இந்து முன்னணி உள்ளிட்ட சங் பரிவார் வகையறாக்கள், நம்மைத் தட்டிக் கேட்க ஆளில்லை என்ற மனப்பான்மையில், இது போன்ற வல்லடி வழக்குகளில் ஈடுபடுகிறார்கள். வீண் வம்புக்கு வரும் விஷம வேலைகளில் குதிக்கிறார்கள். இதனை அனுமதிக்கக்கூடாது.

எவ்வளவு விரைவாக பாபர் மசூதி இடிப்புக் குற்றவாளிகளுக்கு உரிய தண்டனையைப் பெற்றுத் தரமுடியுமோ, அவ்வளவு விரைவாக அந்தக் கடமையைச் செய்தால்தான் இந்த நச்சுக் கூட்டத்தினரின் விஷமத்தனத்திற்கு முற்றுப்புள்ளி வைக்க முடியும். பாதிக்கப்பட்டவர்களிடத்திலிருந்து தீவிர உணர்வோடு இளைஞர்கள் உருவாகாமல் இருப்பதற்கும் இதுதான் சரியான மார்க்கமுமாகும்.

------------------------"விடுதலை" தலையங்கம் 5-12-2009



பார்ப்பனர்களோ கப்-சிப்! பக்தர்கள் யாராவது இந்தக் கேள்வியை எழுப்பியதுண்டா?

தேவநாதனுக்குப் ‘‘பாதுகாபட்டாபிஷேகம்’’


காஞ்சியிலே என்ன நடக்கிறது? மச்சேஸ்வரன் கோயிலாம் அங்கு ஓர் அர்ச்சகப் பார்ப்பானாம். அவன் பெயர் தேவநாதனாம்.

கோயிலுக்கு வரும் பக்தப் பெண்களைக் கோயில் கருவறைக்குள்ளேயே வைத்து சரசலீலை செய்தானாம் உடலுறவு கொண்டனாம் ஊரே சிரிக்கிறது.

அந்தக் காவாளி அந்தக் கேடு கெட்ட காரியத்தைச் செய்ததை கைப்பேசி வழியாக ஒளிப்படமும் எடுத்து வைத்திருக்கிறானாம் புழுத்த நாய் குறுக்கே போகாது அப்படி ஒரு ஆபாசக் கூவம்!

நீதிமன்றத்திற்கு வந்தவனைத் தமிழ்நாட்டுப் பெண்கள் “நல்ல முறையில் வரவேற்று இருக்கிறார்கள்.

செருப்படி, துடைப்பக் கட்டை அடி, சாணியடி சகிதமாக வரவேற்று இருக்கிறார்கள்.

அதே காஞ்சியிலே ஜெயந்திர சரஸ்வதி அரங்கேற்றிய சமாச்சாரத்தை அவரின் சிஷ்ய கே(£)டி தொடர்ந்திருக்கிறான் அவ்வளவுதான்.

ஒன்றை எல்லோரும் மறைத்துவிட்டார்கள் _ பார்ப்பனர்களோ அவர்களின் ஊடகங்களோ ஒன்றை அழுத்தமாக மறைத்து விட்டன.

இவ்வளவு ஆபாசம் வழிந்து ஓடியதே அந்தக் கோயிலின் நடையைச் சாத்தினார்களா? சந்நிதானம் தீட்டுப்பட்டு விட்டது என்று சுத்திகரிப்புச் செய்தார்களா?

ஆகமத்துக்கு விரோதமாக அநியாயங்கள் நடந்துவிட்டன என்று சொல்லி ஆன்மிக முறையில் சடங்குகளைச் செய்தார்களா?

அப்படி ஏதாவது செய்திதான் கசிந்ததுண்டா? இதே பார்ப்பனர்கள் சாமிக்குத் தமிழில் பூஜை செய்தால் தீட்டுப் பட்டுவிடும் என்று “சோ” ராமசாமி வரை புலம்புகிறார்கள்.

கரூரையடுத்த திருமுக்கூடலூரில் உள்ள திருமணி முத்தீசுவரவர் கோயிலில் தமிழில் குடமுழுக்குச் செய்ததற்காக (9.9.2002) பார்ப்பன அர்ச்சகர்கள் என்ன செய்தார்கள்? கோயிலை இழுத்துப் பூட்டவில்லையா? பல நாள்கள் இக்கோயில் மூடிக் கிடக்கவில்லையா? சாங்கியங்கள், சுத்திகரிப்புச் செய்யப்பட்ட பிறகுதான் கோயிலை மீண்டும் திறந்தார்கள். தமிழில் குடமுழுக்குச் செய்ததற்காக காஞ்சி சங்கராச்சாரியார் ஜெயேந்திர சரஸ்வதி, அர்ச்சகர் சங்கமும் கண்டனம் தெரிவிக்கவில்லையா?

சிதம்பரம் நடராசன் கோயில் திருச்சிற்றம்பலத்திலே தமிழில் தேவாரம் பாடினார் என்பதற்காக ஓதுவார் ஆறுமுகசாமி என்ற பெரியவர் தீட்சதப் பார்ப்பனர்களால் அடித்துத் துவைக்கப்படவில்லையா? அவர் கை முறிந்து விடவில்லையா?

மனநலம் சரியில்லாத கிறித்துவ இளைஞன் டேவிஸ் குருவாயூர் கோயிலுக்குள் நுழைந்தான் என்ப-தற்காக, கோயில் தீட்டுப்பட்டு விட்டது என்று கூறி, சுத்திகரித்தார்களே (தினகரன் 21.11.2005) அர்ச்சகப் பார்ப்பான் தேவநாதன் செய்தது அதைவிட அல்பமான காரியமோ? பெரியவா செய்தால் பெருமாள் செய்தது மாதிரி என்பதுஇதுதானோ!

1971 இல் கலைஞர் அவர்கள் தமிழ்நாடு சட்டப் பேரவையில் அனைத்து ஜாதியினருக்கும் அர்ச்சகர் உரிமைக்கான சட்டத்தை நிறைவேற்றிய போது அதனை எதிர்த்துப் பார்ப்பனர்கள் உச்சநீதிமன்றம் சென்றார்களே நினைவிருக்கிறதா?

அப்பொழுது இந்தப் பார்ப்பனர்கள் “வைகனாச” ஆகமம்” என்ற ஒன்றை அவர்களுக்கு வசதியாகத் தாக்கல் செய்தார்களே அந்த வைகனாச ஆகமம் என்ன சொல்லுகிறது?

பொது வழிபாட்டுக்குரிய கோயில்களில் கடவுளின் உருவத்தையோ, சிலையையோ அர்ச்சகரைத் தவிர சத்திரியர்கள் தொட்டு விட்டால் சாமி சிலை தீட்டாகி விடும். அதனை சுத்திகரிக்க தூய நீரினால் அபிஷேகம் செய்யப்பட வேண்டும். பின்னர் ஏழு கலசங்களை வைத்து முறைப்படி வணங்கியபின் சம்ப்ரோட்சணம் செய்ய வேண்டும். வைசியர்கள் தொட்டு விட்டாலும் சாமிதீட்டாகி விடும். 24 கலசங்களைச் செய்து வைத்து சம்ப்ரோட்சணம் செய்ய வேண்டும். பிராமண போஜனமும் செய்யப்பட வேண்டும்.

சூத்திரர்களான நான்காம் வருணத்தவன் தீண்டினாலும் கடவுள் தீட்டாகி விடுவார் அப்பொழுது என்ன செய்யவேண்டுமாம்? 108 கலசங்களைச் செய்து வைத்து, மஹாசாந்தி ஹோமமும், பிராமண போஜனமும் செய்ய வேண்டும் என்று கூறப்பட்டுள்ளதே, இந்த ஆகமக் கூற்றுகளை ஏற்றுக் கொண்டுதானே நீதிபதிகள் தீர்ப்புக் கூறினார்கள்?

(அதிலே ஒரு நீதிபதி அர்ச்சகர் குடும்பத்தைச் சேர்ந்த பார்ப்பனர்)

“ஒரு சைவ, அல்லது வைஷ்ணவ கோயிலில், அர்ச்சகர் நியமனம் அந்தக் கோயிலுக்கு இணக்கமான ஆகமத்தில் கூறப்பட்டிருக்கும் ஆணைகளுக்கு இணங்கவே செய்யப்பட வேண்டும்.

அவ்வாறு செய்யத் தவறினால் அது இச்சட்டத்தின் 28 ஆவது செக்ஷனுக்கு முரணானது மட்டுமல்ல, மதப் புழக்கத்தில் தலையிடுவதாகவும் ஆகும். இதன் தவிர்க்க முடியாத விளைவாக கடவுளின் உருவம் தீட்டுப்பட்டு விடும் என்று தீர்ப்புக் கூறப்பட்டதே!

இப்படியெல்லாம் ஆகமங்கள் கூறுகின்றன உச்சநீதிமன்றமும் தீர்ப்புக் கூறுகிறது.

அதே நேரத்தில் கோயிலில் உள்ள ஓர் அர்ச்சகன் கோயில் கருவறைக்குள்ளேயே பெண்களை இழுத்துச் சென்று காமக் களியாட்டம் ஆடி, உடலுறவு கொண்டு கோயிலைக் காமக் கோட்டமாக _ பள்ளியறையாக, _ படுக்கையறையாக மாற்றிக் கூத்தடித்தால் சாமி சிலை தீட்டாகி விடாதா? அதற்குப் பரிகாரம் செய்யப்படாதது ஏன்? பக்தர்கள் யாராவது இந்தக் கேள்வியை எழுப்பியதுண்டா?

அர்ச்சகப் பார்ப்பான் எப்படியும் நடந்து கொள்ளலாம். காரணம், அவன் பிர்மாவின் நெற்றியிலே பிறந்தவன் . பிர்மாவே, தான் பெற்ற மகள் சரஸ்வதியையே பெண்டாளவில்லையா? அந்தப் பிர்மாவின் நெற்றியில் பிறந்த பிராமணன் கருவறையைக் காமக் கழிநீர் கழிக்கும் (கழிவறை) கக்கூசாகப் பயன்படுத்துவதில் என்ன தவறு என்று “சோ” ராமசாமிகள் எழுதினாலும் எழுதுவார்கள்; அதற்கு வக்காலத்து வாங்கி பழ. கருப்பையாக்கள் “ஹார்மோனி’’யம் வாசித்தாலும் வாசிப்பார்கள் யார் கண்டது?

அன்றைக்குத் தீட்சிதப் பார்ப்பனர்கள் சிதம்பரம் நடராசன் கோயிலில் தமிழராகிய ஆறுமுகசாமியைத் தாக்-கினார்கள். இன்றைக்கோ தமிழ்ப் பெண்கள் காஞ்சிபுரம் மச்சேஸ்வரர் கோயில் அர்ச்சகப் பார்ப்பான் தேவநாதனுக்கு நல்ல பாடம் கற்பித்துள்ளனர்.

விழுந்தது செருப்படி .ஏதோ தேவநாதன் என்ற ஒரு பார்ப்பான்மீது மட்டும் என்று நினைக்க வேண்டாம்! இன்றைக்கு பார்ப்பனர்களைத் தாங்கிப் பிடிக்கும் பார்ப்பனியப் பாதங்களைக் கழுவிக் குடிக்கும் கபோதிகளுக்கும், பார்ப்பனியத் திமிரைப் பூணூல் போட்டு முறுக்கிக் காட்டும் கும்பலுக்கும், பக்தியின் பெயரால் நடத்தும் ஆபாசக் கூத்துகளுக்கும் தமிழ்நாட்டுப் பெண்கள் கொடுத்த “பரிசு அது”. அன்று தமிழ் நாட்டு வீரப் பெண்கள் புலியை முறத்தால் அடித்து விரட்டினார்கள். என்றால், இன்றைக்குத் தமிழ்நாட்டுப் பெண்கள் பார்ப்பனிய ஆபாச சேட்டைகளுக்குச் செருப்பாபிஷேகம் (பாதுகா பட்டாபிஷேகம்) செய்து, பெரியார் மண்ணின் மகத்துவத்தை வீர தீரத்தைப் பாரீர் என்று பாருலகுக்கே தெரிவித்து விட்டார்கள்! வாழ்க அந்த மறக்குல மானமிகு தமிழ் மகளிர் பட்டாளம்!

பார்ப்பனர்களோ கப்-சிப்! உப்புக்கண்டம் பறிகொடுத்த பழைய பார்ப்-பனத்திபோல பதுங்கிக் கிடக்கிறார்கள். தமிழர்களே, உரக்க ஒரு முறை சிரியுங்கள். பக்திக் குட்டையில் உழலும் தமிழர்களும் உடம்பைக் கொஞ்சம் கிள்ளிக் கொண்டாவது சிந்தித்துப் பார்க்கட்டும்!


--------------------மின்சாரம் 5-12-2009 "விடுதலை" யில் எழுதிய கட்டுரை



பெரியாருக்கு தமது அமைச்சரவையையே காணிக்கையாக்கியவர் அண்ணா

தந்தை பெரியாருக்கு தமது அமைச்சரவையையே காணிக்கையாக்கியவர் அண்ணா
குவைத் நிகழ்ச்சியில் தமிழர் தலைவர் பேச்சு


தந்தை பெரியார் அவர்களுக்கு தமது அமைச்சரவையே காணிக்கை என்று அறிவித்து தான் ஏற்றுக்கொண்ட தலைவருக்கு பெருமை சேர்த்தவர் அண்ணா என்று தமிழர் தலைவர் கி. வீரமணி அவர்கள் விளக்கி பேசினார்.

குவைத்தில் திராவிடர் கழக தலைவர் தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்கள் 16.10.2009 ஆற்றிய உரையின் 28.11.2009 அன்றைய தொடர்ச்சி வருமாறு:

பெரியார்தான் தலைவர்

தந்தை பெரியார் அவர்களிடம் பயிற்சி பெற்ற அண்ணா அவர்கள் ஒப்பற்ற பேச்சாளராக, எழுத்தாளராக உயரிய கலைத்துறை தொண்டராக நடிப்பிலும் மிஞ்சக்கூடியவராக இருந்த அண்ணா அவர்கள் அரசியலுக்கு வருகிறார். தனியே கட்சியை கண்ட நேரத்தில் கூட தாம் உருவாக்கிய கட்சிக்கு தலைவர் தந்தை பெரியார்தான் என்று சொன்னார்.

தலைவர் நாற்காலி தந்தை பெரியாருக்காக காலியாகவே இருக்கும் என்று சொன்னார். அண்ணா அவர்களிடம் இருந்த அந்த பணிவு, கனிவு இவைகள் எல்லாம் தந்தை பெரியார் அவர்களிடமிருந்து கற்றார்.

அண்ணா அவர்கள் செய்த சாதனை இருக்கிறதே, அது ஒப்பற்ற சாதனை; வரலாற்றில் இடம் பெற்ற சாதனை. வரலாற்றில் கூட சில மனிதர்கள் பிறக்கின்றார்கள். சிலர் மரிக்கின்றார்கள்.

வரலாற்றை உருவாக்கியவர்

ஆனால் நண்பர்களே, சிலர் புதைக்கப்பட்டு விடுகிறார்கள்; சிலர் எரிக்கப்பட்டு விடுகிறார்கள். ஆனால், சிலர் வரலாற்றில் இடம் பெறக் கூடியத் தலைவராக ஆகிறார்கள்.

ஆனால், அண்ணாவோ தந்தை பெரியார் அவர்களோ வரலாற்றில் இடம்பெற்றவர்கள் அல்லர்; வரலாற்றையே உருவாக்கியவர்கள். அதைத்தான் நீங்கள் எண்ணிப்பார்க்க வேண்டும்.

வரலாற்றை உருவாக்கிய மேதை அவர். தந்தை பெரியார் அவர்களுக்கு உயிருக்கு உயிராக இருந்தவர். தளபதியாக நின்றவர். போர்க்களத்திலே வென்று காட்டினார். அதன் காரணமாக ஆட்சிக்கு வந்தவுடனே உலகத்திலேயே நடைபெற முடியாத ஓர் அரசியல் விந்தை நடைபெற்றது. 1967ஆம் ஆண்டு தமிழக சட்டசபையிலே அண்ணா அவர்கள் எழுந்து சொன்னார்.

அமைச்சரவையே பெரியாருக்கு காணிக்கை

இந்த அமைச்சரவையே தந்தை பெரியார் அவர்களுக்கு அளிக்கப்பட்ட காணிக்கை என்று சொன்னார். உலகத்திலே எங்காவது இப்படி நடைபெற்றதுண்டா? ஒரு தலைவர் ஒரு புரட்சியாளர் சமுதாய வளைவுகளை நிமிர்த்து வதற்காக தன்னை ஒப்படைத்துக்கொண்ட தலைவர்.

அந்தத் தலைவருடைய காலத்திலே அவருடைய தொண்டர்களே அமைச்சராகி, அந்த அமைச்சரவையையே தந்தை பெரியார் காலடியில் வைக்கின்றோம் என்று அண்ணா அவர்கள் சொன்ன, செய்த வரலாறு உலகத்தில் வேறு எங்காவது உண்டா? தேடிப்பாருங்கள்.

அதுமட்டுமல்ல; தந்தை பெரியாருடைய கொள்கையை நடைமுறைப்படுத்திக் காட்டினார் அண்ணா அவர்கள்.

தந்தை பெரியார் அவர்களின் சுயமரியாதை திருமணத்தை நடைமுறைப்படுத்திக்காட்டினார். அண்ணா அவர்கள் ஆட்சிக்கு வருவதற்கு முன்பு நடத்தி வைத்த திருமணங்கள் கூட செல்லாது. எவ்வளவு பெரிய மனிதர்கள் திருமணங்களை நடத்தி வைத்தாலும் செல்லாது. இதுதான் அன்றைக்கு இருந்த நிலை. நண்பர்களே! அண்ணா அவர்கள்தான்_அவர் முதலமைச்சராக இருந்த காலகட்டத்தில்தான் சுயமரியாதைத் திருமணங்கள் செல்லும் என்று சட்ட வடிவமாக்கினார்.

தமிழர்களுக்கு சுயமரியாதைத் திருமணங்களின் மூலம் மான உணர்வைப் பெற்றுத்தந்தார். அண்ணா சட்டத்தைக் கொண்டு வந்து, ஏற்கெனவே நடந்த திருமணங்கள் செல்லும்; இனி நடக்கப் போகிற திருமணங்களும் செல்லும் என்று உருவாக்கிய பெருமை அண்ணா அவர்களையே சாரும்.

ஓராண்டு காலத்திற்குள் முப்பெரும் சாதனை

அவர் ஆண்ட ஓராண்டு காலத்திற்குள் முப்பெரும் சாதனைகளைச் செய்தார். தாய்த்திருநாட்டிற்குத் தமிழ்நாடு என்று பெயர் சூட்டினார்.

அண்ணா அவர்கள் உடல்நிலை சரியில்லாத நிலை. அந்த நிகழ்ச்சிக்கு டாக்டர்கள் போகக்கூடாது என்று சொன்னார்கள் அவரது உடல் நிலையைக் கருதி. அண்ணா அவர்கள் அந்த நிகழ்ச்சியில் பேசிய பேச்சை கேட்க நான் வாய்ப்பு பெற்றேன்.

அண்ணா பேசுகிறார்: நான் இந்தக் கூட்டத்திற்கு வருவதற்கு முன்னால் இந்த நிகழ்ச்சிக்கு செல்ல வேண்டாம் உடல்நிலை சரியில்லை என்று மருத்துவர்கள் கூறினார்கள்.

நீங்கள் போனால் உடல்நிலை கெடும் என்று சொன்னார்கள். உடனே நான் மருத்துவர்களிடம் சொன்னேன். என்னுடைய தாயகத்திற்கு தமிழ்நாடு என்று பெயர் வைக்கும் நிகழ்ச்சிக்குச் செல்லவில்லையென்றால், அதனால் என்னுடைய உடலுக்கு விளைவுகள் ஏற்பட்டால் அதைவிடப் பெருமை வேறு எனக்கு இல்லை.

இந்த உயிர் இருந்து என்ன பயன்?

எனவே, தாய்த் திருநாட்டிற்கு தமிழ்நாடு என்று பெயர் வைத்த இந்த நிகழ்ச்சியில் என்னுடைய வாழ்க்கை முடியுமானால், அதைப் பற்றிக் கவலை இல்லை. இந்த உயிர் இருந்து என்ன பயன்?

மருத்துவர்கள் என்ன சொன்னாலும் அதைப்பற்றிக் கவலைப்படாமல் இந்த விழாவிற்குத் துணிந்துதான் வந்திருக்கின்றேன் என்று சொன்னார்கள்.

எனவே, இன்றைக்கு தமிழ்நாடு என்று உலகம் பூராவும் தெரிந்திருக்கிறது. இதற்கு முன்னாலே பலமுறை செய்ய எண்ணினார்கள். ஆனால் இதை தி.மு.க தான் செய்ய வேண்டும் என்று சரித்திரம் விட்டு வைத்திருக்கிறது. எனவேதான் நான் இதை செய்திருக்கிறேன் என்று அண்ணா அவர்கள் இதை சட்டமன்றத்திலே பதிவு செய்தார்கள். (பலத்த கைதட்டல்)

அதற்கடுத்து இருமொழிக்கொள்கை பின்பற்றப்படும் என்று அண்ணா சொன்னார். இந்தி மொழிக்கு தமிழகத்தில் இடமில்லை. ஆங்கிலம், தமிழ் மொழி பின்பற்றப்படும் என்று அறிவித்தார்கள்.

அண்ணா அவர்களின் இப்படிப்பட்ட அரிய சாதனை பலரின் வேதனையை நீக்கியிருக்கிறது. இவை எல்லாம் மிகப்பெரிய சரித்திர சாதனைகளாக நிலை பெற்று நின்றன.

அண்ணா அவர்களுக்குப் பல பரிமாணங்கள் உண்டு. ஆட்சியாளர் அண்ணா, பேச்சாளர் அண்ணா. எழுத்தாளர் அண்ணா, நாடாளு-மன்றவாதி அண்ணா என்று பல பரிமாணங்கள் உண்டு.

அண்ணாவின் பேச்சு

அண்ணா அவர்கள் ஆங்கிலத்தில் பேசுவதில் மிகச் சிறந்தவர். தமிழ்மொழிப் பேச்சில் எப்படி வல்லுநரோ அதே போல ஆங்கிலத்திலே அண்ணா அவர்கள் மிகச் சிறந்த பேச்சாளர்.

நாம் அண்ணா அவர்களுடைய தமிழ்ப் பேச்சைத்தான் பல நேரங்களிலே கேட்டிருக்கிறோமே, தவிர அவருடைய ஆங்கில நடையை நாம் கேட்டது கிடையாது. அவருடைய ஆங்கில நடை அவ்வளவு அற்புதமாக இருக்கும். அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் ஒரு முறை மாணவர்கள் பேச அழைத்தார்கள்.

அண்ணா அவர்கள் அந்த நிகழ்ச்சிக்கு வந்து சேர்ந்தார். அங்குள்ள மாணவர்கள், அண்ணா அவர்களே! நீங்கள் இப்பொழுது ஆங்கிலத்தில் பேச வேண்டும் என்று சொன்னார்கள். ஆற்றோரம்

அதற்குத் தலைப்பு என்ன தெரியுமா? அதாவது ஆற்றோரம் என்ற தலைப்பிலே ஆங்கிலத்திலே பேசுங்கள் என்று சொன்னார்கள்.

உடனடியாக அண்ணா அவர்கள் பேச ஆரம்பித்தார். நம்முடைய இந்திய வரலாறு எங்கேயிருந்து தொடங்குகிறது என்றால் கங்கைக் கரையிலேயிருந்து தொடங்குவதாக எழுதியிருக்கின்றார்கள்.

நமது வரலாறு காவிரிக்கரையிலிருந்து வரவேண்டும் என்பதுதான் மிக முக்கியமானது என்று ஆங்கிலத்திலே மிக அற்புதமாகச் சொன்னார்கள். அண்ணா அவர்கள் முதல்வராக இருந்த நிலையிலே அமெரிக்கா செல்கின்றார். சப்_பெலோஷிப் என்னும் பட்டத்தை அமெரிக்காவில் அண்ணா அவர்களுக்கு வழங்குகினர்.அண்ணா அவர்கள் அமெரிக்க மாணவர்களிடம் உரையாற்றுகின்றார்.

அண்ணாவிடம் கேள்வி

அண்ணாவின் ஆங்கில நடையைப் கேட்டுவிட்டு வியப்படைந்த மாணவர்கள் ஒன்றைக் கேட்கிறார்கள். அண்ணா அவர்களே! பிக்காஸ் (because) என்ற வார்த்தை மூன்று முறை வரக்கூடிய ஒரு வாக்கியத்தை நீங்கள் சொல்லுங்கள் என்று கேட்டார்கள். அண்ணா அவர்கள், இருங்கள் நான் யோசித்துச் சொல்லுகிறேன் என்றெல்லாம் சொல்லவில்லை.

பட்டென்று சொன்னார்: No sentence ends with
because because, because is the conjunction’ என்று சொன்னார்

(பலத்த கைதட்டல்)

. --------------- தொடரும் --------------"விடுதலை" 30-11-2009